*அற்புதமான அரசுப் பள்ளிகளின் ஆன்மாக்கள்*
இது, "நான் ஒரு சிறந்த ஆசிரியர்; எங்கள் பள்ளி ஒரு சிறந்த பள்ளி" என்ற நம்பிக்கை நிறைந்த ஆசிரியர்கள் வாழும் பள்ளி!
அற்புதமான ஆசிரியர்கள், அனைத்து வகையான வசதிகள், தொழில்நுட்ப கட்டமைப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், இரம்மியமான சுற்றுச்சூழல், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்கள் விரும்பும் வகுப்பறை, பள்ளிச் சூழல் இப்படி அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ள அரசுப் பள்ளிகள் நம் நாட்டில் ஏராளம் உள்ளன. அவை பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளாகவே இருப்பதை காணமுடிகிறது. ஆனால் கிராமப் புறத்திலுள்ள ஒரு நடுநிலைப் பள்ளி இப்படிப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஒருங்கே பெற்று உலகத்தரத்தில் விளங்கி வருகின்றது என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதுமாகும்.
*கல்வித்தரம்:*
இப்பகுதியில் உள்ள வங்கி ஊழியர்கள் முதல் கிராம நிர்வாக அதிகாரி வரை அனைத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகளும் இப்பள்ளியில்தான் படிக்கின்றனர். இதுவே இப்பள்ளியின் கல்வித்தரத்திற்கு சிறந்த உதாரணம் எனலாம்! அதுமட்டுமல்ல இப்பள்ளி ஆசிரியர்கள் இருவரின் பிள்ளைகள் இப்பள்ளியில்தான் பயில்கின்றனர். இப்பள்ளியின் 15 மாணவர்கள் அரசு ஊழியர்களின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
*மாணவர்கள் விரும்பும் பள்ளி:*
இங்கே மாணவர்கள் விரும்பி ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதும் மகிழ்ச்சியோடு படிப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. வருடாவருடம் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.
*இரம்மியமான சுற்றுச்சூழல்:*
பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் முதல் வகுப்பறை ஜன்னல் வரை ஒரு அங்குலம் கூட விடாமல் அனைத்து இடங்களையும் அற்புதமான படங்கள், ஓவியங்கள் வரைந்திருப்பது உண்மையில் சிறப்பான முயற்சிக்கு சரியான உதாரணமாகும்.
*வகுப்பறையில் கோளரங்கம்:*
வகுப்பறையில் அமர்ந்து பார்த்தால் ஆழ்கடல் காட்சிகள், அறிவியல் உண்மைகளை விளக்கும் ஓவியங்கள் என நம்மை அந்த உலகத்திற்கே கொண்டு செல்கின்றன. மற்ற பள்ளிகளில் அண்ணாந்து பார்த்தால் மேலே மின்விசிறி மட்டுமே தெரியும். ஆனால் இப்பள்ளியின் வகுப்பறைகளில் அண்ணாந்து பார்த்தால் கோள்கள், நட்சத்திரங்கள் என நம்மை பிர்லா கோளரங்கத்திற்கே கொண்டு செல்கின்றன மேலே உள்ள காட்சிகள்.
*அற்புதமான ஆசிரியர்கள்:*
பொதுத் தகவல்களைத் திரட்டி சேகரிக்கும் ஒரு சிறந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் இடைநிலை ஆசிரியர் திரு ராஜன் அதை தனது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார். மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த முழுமையாக வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் இவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பாடம் நடத்துவதால் இதற்கு முக்கியத்துவம் தருவது தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவே கருதுகிறார். பள்ளியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க பள்ளி மற்றும் பெற்றோர்களிடையே பாலமாக செயல்பட்டு வருவது இவரின் கூடுதல் சிறப்பாகும். தொலைநோக்குப் பார்வையுடன் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளி வளர்ச்சித் திட்டம் வகுக்கும் வகுப்பாசிரியரியரும் இவரே.
தான் ஆசிரியராகப் பணியாற்றும் இதே பள்ளியில் தனது குழந்தையை படிக்க வைப்பதில் பெருமிதம் கொள்ளும் வகுப்பாசிரியர் திரு நாகராஜன் அவர்கள், பள்ளியைத் தாண்டி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்.
உதாரணத்திற்கு பள்ளியின் பசுமை திட்டப் பொறுப்பாளரான இவர் கிராமப் பகுதிகளில் விதைப்பந்து/ விதைகள் தூவுதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பசுமை பணிகளில் ஈடுபட்டு கிராம வளர்ச்சியிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். சமீபத்திய புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் மாணவர்களுக்கு அப்டேட் செய்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர்.
தனது பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் மட்டுமல்ல கையெழுத்தும் அழகாக இருக்க வேண்டுமென அக்கறையுடன் முயற்சி செய்து வரும் ஆங்கில ஆசிரியை திருமதி கமலவள்ளி. பள்ளியில் இந்தி தெரிந்த ஆசிரியரும் இவர்தான் என்பதால் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிற மொழிகளை பயிற்றுவிப்பவர்.
கடினமான கணிதத்தையும் கதை வடிவில் கரைத்து மாணவர்களுக்கு எளிதாக விளக்கும் கதைசொல்லி திருமதி அரங்கநாயகி அவர்கள் மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியில் கலை மன்றத்தை ஏற்படுத்தி அதை வழிநடத்தி வருகிறார்.
பாடும் திறமை, இசை என இயல், இசை, நாடகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகுப்பாசிரியர் திருமதி புஷ்பலதா அவர்கள் மாணவர்களின் கையெழுத்து மேம்படவும் சிறப்பு பயிற்சியளித்து வருகிறார்.
அனைத்து பாடங்களையும் தனிக் கவனத்துடன் மாதிரிகள் கொண்டு நடத்தும் வகுப்பாசிரியையான திருமதி சசிகலா அவர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்திட முழுமையாக வாய்ப்புகள் வழங்குபவர்.
கோரோணா காலத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்போடு மாணவர்களின் கற்றலை உறுதி செய்தவர் இவர்.
*அறிவியல் ஆசான் அன்பழகன்:*
பள்ளியில் 'நியூட்டன் அறிவியல் மன்றம்' மூலம் மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்பு செயல்பாடுகளை தன்வசப்படுத்தவும் மாணவர்கள் சிறப்பாக அறிவியல் படைப்புகளை உருவாக்கிடவும் உத்வேகமளித்து உற்சாகப்படுத்தி வருபவர் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் திரு அன்பழகன் அவர்கள்.
'காஞ்சி டிஜிட்டல் டீம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசுப்பள்ளி ஆசிரியர்களை தகவல் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த விடுமுறை நாட்களில் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறார்.
தனித்திறன் மிக்க குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் 'குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா' என்ற நிகழ்வை வருடாவருடம் நடத்தி வருவதோடு மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் 'மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல்' என்ற நிகழ்வினையும் ஒருங்கிணைத்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜப்பான் அரசு உலகளவிலான கல்விமுறை குறித்த ஒரு கருத்தரங்கம் நடத்திய போது அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஒரே ஆசிரியரும் திரு அன்பழகன்தான். பள்ளி, வேலை நேரம் என்று பாராமல் மாணவர்களை தொடர்ந்து வழிநடத்துவதால் பல மாணவர்கள் மகுடம் சூடிவருகின்றனர். உதாரணமாக
அறிவியல் மன்றம், சுற்றுசூழல் மன்றம் , கணினி வகுப்பு, ரோபோட்டிக் பயிற்சி என இப்பள்ளியின் மாணவர்களை
மாநில அளவில் AI மாணவர்களாக உருவாக்கி வருகிறார். சமீபத்திய Inspire award -லும் தொடர்ந்து மாணவர்களை வெற்றியடையச் செய்து பரிசுத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளனர் இப்பள்ளியின் மாணவர்கள். மேலும் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அவர்களை உலகரியச் செய்து வரும் அறிவியல் ஆசான் திரு அன்பழகன் இந்நாட்டிற்குத் தலைசிறந்த விஞ்ஞானிகளை உருவாக்கத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்.
*தனிச்சிறப்புமிக்க தலைமை ஆசிரியர்:*
தான் படித்த பள்ளியிலேயே இப்போது தலைமை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி சு.சந்தானலட்சுமி அவர்கள் பள்ளியின் விரைவான வளர்ச்சிக்கு வித்திட்டவர். உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்டுக்கோப்பான சூழலை உருவாக்கியவர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் சொல்லும் ஒரு பிரச்சினை விடுமுறை நாட்களில் உள்ளூர் நபர்கள் பள்ளி வளாகத்தினுள் நுழைந்து சேதம் ஏற்படுத்துகின்றனர் என்பதுதான். ஆனால் இப்பள்ளியில் அந்த பிரச்சினையே இல்லை. அந்தளவுக்கு உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் அவர்களுடன் ஒரு நல்ல பிணைப்பும் உள்ளது.
காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்டறிந்து உடனே தனது சொந்த செலவில் அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வரும் இவர் மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியே செல்லும்போது வாசலில் நின்று மாணவர்களை அழைத்துச் செல்ல வரும் பெற்றோர்களை வரவேற்றும் மாணவர்களை இன்முகத்தோடு வழியனுப்புவதும் ஆரோக்கியமான நடைமுறைப் பழக்கம் என்றே சொல்லலாம்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் பெயரை சொல்லக் கூடிய தலைமை ஆசிரியர் மாணவர்களின் பெற்றோர்களுடன் நெருக்கமாகப் பழகும் குணமும் சரியான புரிதல் இன்றி நடந்து கொள்ளும் சில பெற்றோர்களையும் கூட திறம்பட சமாளிப்பவர்.
பள்ளியின் வளர்ச்சி ஒன்றே தனது குறிக்கோளாகக் கொண்ட இவர் ஆசிரியர்களுடன் கருத்து மோதலோ பிடிவாத குணமுமோ கொள்ளாமல் தேவைப்பட்டால் விட்டுக்கொடுத்து போகும் உயர்ந்த பண்புடையவர். உள்ளூர் மக்களின் ஒருங்கிணைப்பு, பெற்றோர்களுடன் நல்ல பிணைப்பு, ஆசிரியர்களின் முயற்சிகளை ஊக்குவிக்குவித்து முழு ஒத்துழைப்பு தருவது என சிறந்த தலைமைப் பண்புகளுடன் விளங்குகிறார் தலைமை ஆசிரியர் திருமதி சு.சந்தானலட்சுமி அவர்கள்.
*ஆட்டோ வசதி:*
நீரடி, கம்மாளம்பூண்டி, வேடபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் இப்பள்ளிக்கு வருகின்றனர். இப்படி சற்று தூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கென ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது ஆக்கபூர்வமான முயற்சி மட்டுமல்ல பள்ளி பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தின் உறுதியான கட்டமைப்பையும் நல்ல செயல்பாடுகளையும் காட்டுகிறது.
*மாணவர்களின் தனித்திறன்:*
இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறமைகளும் அபாரமாக உள்ளது. பள்ளியின் 50 சதவீத மாணவர்கள் சிலம்பம் தெரிந்தவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஓவியத்தில் சிறந்து விளங்குகின்றனர்.ஓவியம் என்றால் ஏதோ பூக்கள் வரைவது மயில் வரைவது என்று பொதுவாக அல்லாமல் உங்களை அமர வைத்து தத்துரூபமாக உங்கள் உருவத்தை வரைந்து விடும் ஆற்றல் படைத்த மாணவர்கள்.
அனைவரும் பேச்சு திறன் பெற்றவர்கள். மாவட்ட/மாநில அளவிலான அனைத்து போட்டிகளிலும கருத்தரங்களிலும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இது போன்ற இணையவழி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றும் நிகழ்ச்சி நெறியாளர்களாகவும் உருவாகியுள்ளனர் இப்பள்ளியின் மாணவர்கள்.
*அரசுப் பள்ளிகளின் ஆன்மாக்கள்:*
மாணவர்களுக்கு உயர்ந்த இலக்கை சுட்டிக்காட்டி அதை நோக்கிப் பயணிக்க அவர்களைத் தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்கள் இப்பள்ளியின் மணிமகுடம். துவக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்களின் தேடல் ஆர்வத்தை துவக்கி வைப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் "நான் ஒரு சிறந்த ஆசிரியர்; எங்கள் பள்ளி ஒரு சிறந்த பள்ளி" என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் மாணவர்களின் கற்றல் திறனையும் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் சிறந்து விளங்குகின்றனர்.
இப்படிப்பட்ட அற்புதமான ஆன்மாக்கள் நிறைந்த ஒரு சிறந்த அரசுப்பள்ளியாக விளங்குகிறது காஞ்சிபுரம் மாவட்டம் *ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உத்திரமேரூர் 1-3 வார்டு*.
ஜெய்ஹிந்த்.
- கிள்ளிவளவன்,02.05.2022











பள்ளியின் அமைவிட சூழல், சுவர் ஓவியங்கள், தன்னலமற்ற ஆசிரியர்கள், துடிப்பு மிகக் மாணவ மாணவிகள், பள்ளியின் வளர்ச்சியில் கிராமத்நினரின் பங்களிப்பு அருமை🌿
ReplyDeleteகட்டுரை கண்முன்னே காட்சியாய் ஓடவிட்டது அதனினும் சிறப்பு 🌿🌳🌾
இத்தனை சிறப்பு மிக்க பள்ளியில் இருந்து மாணவர்கள் தஞ்சாவூர் விதையால் ஆயுதம் செய் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய ஐயா கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் போட்டிகளில் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை🌾🌱